புல்வாமா தாக்குதலுக்காக வெடிகுண்டு தயாரிக்க, அமேசானில் ஆன்லைன் மூலம் வேதிப்பொருட்கள் வாங்கிய 19 வயது இளைஞன் உள்ளிட்ட 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியது, தீவிரவாதி ஆதில் அஹமத் தர் ((Adil Ahmad Dar)) என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் 5 பேர், பல்வேறு தேடுதல் வேட்டைகளின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீநகரை சேர்ந்த வைசுல் இஸ்லாம் ((Waiz-ul-Islam)) மற்றும் புல்வாமாவை சேர்ந்த முஹம்மத் அப்பாஸ் ராதர் என்ற 2 தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில், 19 வயது நிரம்பிய வைசுல் இஸ்லாம், புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, தன்னுடைய ஆன்லைன் ஷாப்பிங் கணக்கை பயன்படுத்தி, வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளான். இவற்றை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கட்டளையின்பேரில் ஆன்லைன் மூலம் வாங்கியதாக விசாரணையில் அவன் ஒப்புக்கொண்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கிய வைசுல் இஸ்லாம், அவற்றை தீவிரவாதிகளிடம் நேரடியாக வழங்கியுள்ளான். இதேபோல கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு இளைஞனான முஹம்மத் அப்பாஸ் ராதர், தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய ஆதில் அஹம்மத் தர் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தவன்.
இந்த வழக்கில் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் ஆகியோரது வீட்டிற்கு தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிய வேலையையும் ராதர் மேற்கொண்டாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆதில் அஹம்மத் தர் கடைசியாக எடுத்த வீடியோவை, பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பிறகு வெளியிட்டது. இந்த வீடியோ தாரிக் அஹம்மத் ஷா வீட்டில் எடுக்கப்பட்டது என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.