இதுவரை உலகில் மொத்தம் 85 நாடுகளுக்கு கொரானா தொற்று பரவியுள்ளது. கொரானா தாக்குதல் அமெரிக்க பொருளாதாரத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவில் உருவான கொரானா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளிலும் கோர தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பலியானவர்கள் எண்ணிக்கை 3400ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வாட்டிகன் சிட்டியில் முதலாவது கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள Grand Princess என்ற சொகுசுக் கப்பலில் இருக்கும் ஆயிரம் பணியாளர்கள் உள்ளிட்ட 3,500 பயணிகளும், கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற பதைபதைப்பில் உள்ளனர்.
கொரானாவுக்கு கலிபோர்னியாவில் பலியான முதலாவது நபர் இந்தக் கப்பலில் பயணித்தவர் என்பதால் அந்த கப்பல் தனியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரானா சோதனை உபகரணங்களை அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த கப்பலில் போட்டன. அதில் நடத்தப்பட்ட சோதனையில் பலருக்கு தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் மேலும் 309 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 593 ஆக உயர்ந்தது.
நெதர்லாந்து நாட்டில் கொரானா வைரஸ்க்கு முதல் நபர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக கொரானா தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து 228 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 பேர் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே பாக்ஸ் ஒன் தொலைக்காட்சி தேர்தல் விவாத த்தில் பங்கேற்று பேசிய அதிபர் டிரம்ப் கொரானா பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தினாலும் தமது நிர்வாகம் அதை சமாளிக்கும் என கூறியுள்ளார்.