நாட்டில் கொரானா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக 6 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் மக்கள் கூட்டங்கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொரானா பாதிக்கும் அபாயம் உள்ளதால் மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரானா உறுதி செய்யப்பட்ட 31 பேரில் கேரளாவில் தொற்று ஏற்பட்டு குணமடைந்த 3 பேரும் அடக்கம். இவர்களைத் தவிர டெல்லியில் இரண்டு பேர், குருகிராம், ஐதராபாத், காசியாபாத் நகரங்களில் தலா ஒருவரும், ஆக்ராவில் 6 பேரும், ஜெய்பூரில் ஒரு இந்தியர் மற்றும் 16 இத்தாலியர் உள்பட 17 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். டெல்லியில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உத்தம் நகரைச் சேர்ந்தவர் என்றும் அண்மையில் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
கொரானா தொற்றை அடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது. மலைவாச ஸ்தலமான மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஹோட்டல்கள் அனைத்தும் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளன.
சீன எல்லையான நாது லாவுக்கு செல்லக்கூடாது என்ற பொது எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பல அமைச்சகங்களுடன் இணைந்து கொரானா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறித்தி உள்ளது. அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் +91-11-2397 8046 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.