இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. சிக்கிம் அரசும், டார்ஜிலிங் நிர்வாகமும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் 6 பேருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூரில் மேலும் 23 பேரை இந்த வைரஸ் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.இவர்களில் 16 பேர் இத்தாலி நாட்டு பயணிகள் ஆவர்.
கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் டெல்லியில் அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை முறையை தற்காலிகம் ஆக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
டெல்லியில் திடீரென மழை பெய்ததால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்த நிலையில், பருவநிலை மாற்றத்தால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மழையால் இருமல் சளி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் முகக் கவசம் அணிந்தபடி வந்த ஹர்ஷ் வரதன், பயணிகளிடமும் அதிகாரிகளிடமும் உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயணிகளிடம் நடத்தப்படும் பரிசோதனை 21 விமானநிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் ஹர்ஷ் வரதன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகர் விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிரமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அண்டை நாடுகளிலிருந்து குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சிக்கிமில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்களுக்கு அறைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.