கொரானா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு, எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றன. அவை, என்னென்னெ, இப்போது, பார்க்கலாம்...
கோவிட்-19 என்ற பொதுப்பெயருடன் அழைக்கபடும் கொரானா வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவி வருகிறது. கொரானா பாதித்த ஒருவரது, தும்மல், இருமல் மூலம் பரவும் கொரானா, எளிய சுகாதார முறைகள் மூலம், முன்னெச்செரிக்கையாக தடுக்கலாம் என, மருத்துவ உலகமும், சுகாதாரத்துறையும் கூறி வருகின்றன. அடிக்கடி, சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்.
பல்வேறு இடங்களுக்குச் செல்வோர், அடிக்கடி கண்கள், மூக்கு, வாயை தொடக் கூடாது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 முறை குளிக்க வேண்டும். தொடர் சளி, இருமல் என்றால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். தொடர் காய்ச்சல் இருந்தால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக டாக்டரை பாருங்கள்.
ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் கொரானா எளிதாக பரவுவதால், நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை குறைந்தபட்ச இடைவெளிவிட்டு நின்று பேசுங்கள். தும்மும் போதும், இருமும் போதும், கர்சீப் அல்லது டிசியூ பேப்பர் பயன்படுத்த வேண்டும். சானிடைசர் இருந்தால் அதை பயன்படுத்தி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தலாம்.
சர்ஜிக்கல் மாஸ்க், கொரானா போன்ற நுண் கிருமிகளை தடுக்க இயலாது என்கிறது மருத்துவ உலகம். எனவே, நுண்கிருமிகளை முற்றாக தடுக்க வல்ல, N95 போன்ற உயர்ரக முகமூடிகளை அணியலாம் என்கின்றனர், மருத்துவர்கள்...
கட்டாயப் பணியின்றி வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதீர் என்றும், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் நலம் என்றும், மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், அடிக்கடி கைபடும் இடங்களிலும், அழுக்காக உள்ள இடங்களிலும் கைகளை வைக்க கூடாது. கைகளில் அழுக்கு இருந்தால் சானிடைசரால் பயனில்லை. எனவே, கைகளை நன்றாக கழுவியபின் சானிடைசர் உபயோகிக்கவும். பேசும்போதும் மற்றவர் மீது எச்சில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.