குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்த்துக்கொள்ளக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பேச்லட், (Michelle Bachelet) உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், நாட்டின் உள்விவகாரத்தில் வெளிநாட்டினர் தலையிட முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், குடியுரிமைச் சட்டத் திருத்தம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும், சட்டத்தை இயற்ற இறையாண்மையுள்ள இந்திய நாடாளுமன்றத்துக்கு உரிமையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த இறையாண்மையில் தலையிட வெளிநாட்டினர் யாருக்கும் உரிமையில்லை என்றார் அவர். இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட துயரங்களால் பாதிக்கப்பட்டோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவே குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.