டெல்லி கலவரம் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 நாள் கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. ஆனால் பல்வேறு இடங்களில் கலவரம் நடைபெறாத நிலையிலேயே நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளால் மக்களிடையே பீதியும், பதற்றமும் ஏற்பட்டது. அந்த வகையில் நிஹால் விஹார் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் சுக்லாவின் செல்ஃபோனில் இருந்து பல்வேறு போலித் தகவல்கள் பரப்பப்பட்டதை உறுதிப்படுத்திய சைபர்கிரைம் போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
சுக்லாவுக்கு டிவிட்டரில் 10 ஆயிரம் பின்தொடர்வோர் இருப்பதால் தகவல்களை பரப்புவது அவருக்கு எளிமையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட பல்வேறு பகுதிகளில் பீதியை கிளப்பும் வகையில் வதந்திகளை பதிவிட்ட மேலும் 24 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.