நேரடி வரி வழக்குகளுக்கு தீர்வு காணும் மசோதாவை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் 9 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 83 ஆயிரம் நேரடி வரி வழக்குகள் தேங்கியிருப்பதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்குகளைச் சந்திப்பதன் மூலம் ஏற்படும் பணம் மற்றும் நேர விரையத்தை மிச்சப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். அதன்படி வழக்குகளில் சிக்கியவர்கள், வரி முழுவதையும் வரும்31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
வழக்குகள் வரி மற்றும் அபராதம் தொடர்புடைதாக இருந்தால் மார்ச் 31-க்குள் 25 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடனும் மார்ச் 31க்குப் பிறகு 30 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடனும் வரி செலுத்த அனுமதிக்கப்படும்.