நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. டெல்லி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது பகுதி ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடைபெறவுள்ளது.
டெல்லியில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வன்முறையாளர்கள் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் டெல்லி வன்முறை தொடர்பாக பிரச்னை எழுப்ப முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு வசதியாக இரு அவையிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, நடப்பு தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மசோதா இந்த தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.