டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அடைக்கலம் அளிக்க வேண்டாம் என மாணவர்களைத் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி வன்முறையில் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். வீடுகள் சூறையாடப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வீடின்றித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தைப் தங்குவதற்கு பயன்படுத்துமாறு வீடிழந்து தவிப்பவர்களுக்கு மாணவர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், பல்கலைக்கழகத்தைப் புகலிடம் ஆக்க வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் உதவிப்பொருட்களைச் சேகரித்து அவர்களுக்கு வழங்கி உதவலாம் என்றும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.