கலவரம் பாதித்த டெல்லியில் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் மக்கள் கூட்டமாக கூடுவதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.
வட கிழக்கி டெல்லியின் கலவர இடங்களில் அமைதி நிலவி, இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து சீரடைந்துள்ளதுடன், சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தீக்கிரையான வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்ட உடைமைகள் உள்ளிட்டவற்றை கிரேன்கள், புல்டோசர் உதவியுடன் புதுடெல்லி மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
வகுப்பு மோதலை வளர்க்கும் நோக்கில் சில தீய சக்திகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கலவரம் வெடித்த பகுதிகளில் வசித்த மக்களில் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதால் அங்கு மயான அமைதி நிலவுகிறது. நிலைமை கட்டுக்குள் வந்தாலும், போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் முக்கிய சந்திப்புகளில் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுவரை 330 அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்தாமல் போலீஸ் வேடிக்கை பார்த்தது அல்லது தேவையான எண்ணிக்கையில் போலீஸ் வரவில்லை போன்ற விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. எனினும் அவசர உதவி தேவைப்படுவோர் 22829334, 22829335 ஆகிய அவசர எண்களில் தொடர்பு கொள்ளுமாறு டெல்லி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.