டெல்லி வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடந்த ஞாயிறுன்ற டெல்லியில் வன்முறை வெடித்தது. இதில் 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
போலீசாருடன் பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும் நேரில் பார்வையிட்டு பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்த கலவரம் தொடர்பாக வெவ்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்டிருந்த வழக்குகள், தொடர்பான விசாரணை முழுவதும் தற்போது சிறப்பு புலனாய்வு குழுக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், வன்முறை தொடர்பாக கடந்த 27-ம் தேதி வரையில் 48 வழக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.((gfx in))