தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 55 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கான புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13ஆம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 16ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 18. தேவைப்படும் பட்சத்தில் மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலை 5 மணிக்கே முடிவுகள் அறிவிக்கப்படும்.