அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு இந்தியா உலகின் தவிர்க்க முடியாத நாடாக திகழும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாக கூறியுள்ள அவர், இந்தியா விரும்பினால் சமரசரச் தீர்வு காண உதவத் தயார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு நாள் இந்திய பயணத்தின் நிறைவாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாக கூறிய அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றார். மக்களுக்கு உகந்த முடிவை மோடி அரசு எடுக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மோடியுடன் விவாதிக்கவில்லை என்ற டிரம்ப், கடந்த காலங்களில் இந்தியா மத சுதந்திரத்திற்காக கடுமையாக பாடுபட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இந்திய மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், மோடி ஒரு வலிமையான தலைவர் என பாராட்டினார்.
தமது 2 நாள் பயணம் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாக குறிப்பிட்ட டிரம்ப், எரிசக்தித் துறை உள்ளிட்டவற்றில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் வளர்ந்துள்ளதாக கூறினார். அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ராணுவத் தளவாடங்கள் வாங்குவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கொரானா தொற்று குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீன அரசு அதைக் கட்டுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். மதம் அடிப்படையிலான பயங்கரவாதத்தை தம்மைப் போல வேறு யாரும் ஒழித்ததில்லை என்றும் டிரம்ப் கூறினார்.