டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டக்காரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்த நிலையில், வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அச்சட்டத்துக்கு ஆதரவாகவும் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சிஏஏ ஆதரவு பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தெரிவித்த சர்ச்சை கருத்துகளை அடுத்து இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வடகிழக்கு டெல்லியில் பஜான்புரா, மௌஜ்பூர் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டவர்கள், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் காவலர் ஒருவர் உயிரிழந்ததார். உயரதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்னும் சற்று நேரத்தில் டெல்லி வரவுள்ள நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளது.