இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கைழுத்தாக உள்ளதாகவும் அதனால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்தியாவிற்கு பலநன்மைகள் ஏற்படும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பே அமெரிக்கா இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம், கணினி உள்ளிட்ட பல்வேறு வணிக வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அவை செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளது மக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாட்டின் தலைவராகவும், உலகின் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக சக்தி வாய்ந்த நாட்டின் அதிபராகவும் அமெரிக்க அதிபர் இருப்பதால், அமெரிக்க அதிபர்களின் வருகைகள் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவிற்கு இதுவரை ஆறு அமெரிக்க அதிபர்கள் வருகை தந்துள்ளனர், ஒவ்வொரு அதிபரின் வருகையின் போதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
டுவைட் ஐசநோவர்
சுதந்திரத்திற்கு முன்பு வரை இந்தியா அமெரிக்கா உறவில் பெரிதாக எந்த இணக்கமான சூழலும் இருக்கவில்லை. சுதந்தரத்திற்கு பிறகான இந்தியாவில் அமெரிக்காவுடனான உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் முதல்முதலில் இந்தியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் டுவைட் ஐசநோவர் சுதந்திரம் அடைந்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது இவர் இந்தியாவிற்கு வந்தார்.
நான்கு நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்த அவருக்கு இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது ,டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். மேலும் இந்திய பாராளுமன்றத்திலும் உரையாற்றினார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களையும் ஐசநோவர் பார்வையிட்டார். மேலும் பொருளாதார ரீதியில் பல சிக்கல்களை இந்தியா சந்தித்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அதிபர் டுவைட் ஐசநோவரின் வருகை இந்தியாவிற்கு சற்று உதவிகரமாக அமைந்தது.
ரிச்சர்ட் நிக்சன்
ஐசநோவரை தொடர்ந்து பல ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இந்தியா வந்தார்.அந்த காலத்தில் நிக்சன் தீவிர பாகிஸ்தான் ஆதரவாளராக இருந்துள்ளார், மேலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அணிசேரா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாலும், இந்தியா ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்ததாலும் நிக்சன் இந்தியாவில் வெறும் 23 மணிநேரம் மட்டுமே இருந்தார் எனவே இவரின் வருகை இந்தியாவிற்கு எந்த விதமான தாக்கத்தையும், நன்மையையும் அளிக்கவில்லை.
ஜிம்மிகார்ட்டர்
1971 இந்தோ பாகிஸ்தான் போர் 1974 அணுகுண்டு சோதனை என பரபரப்பாக இருந்த அன்றைய இந்திய சூழலில், இந்தியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருந்தது அந்த காலகட்டத்தில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் வருகை புரிந்தார்.அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவை நிலைநாட்டும் வகையில் அவரின் பயணம் இருந்தது.
மேலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தவுலத்ப்பூர் எனும் கிராமத்திற்கு சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதனால் அவரின் நினைவாக அந்த ஊரின் பெயர் கார்ட்டர்பூர் என பெயர் மாற்றப்பட்டது. இருந்தாலும் பாகிஸ்தான் அணுஆயுதங்களை தயாரிப்பதை ஊக்குவித்த கார்ட்டர், இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்துமாறு கூறினார்.
பில் கிளிண்டன்
கார்ட்டரை அடுத்து பில் கிளின்டன் தனது மகள் செல்சியா வுடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அமெரிக்க அதிபரின் இந்திய பயணமாக அது அமைந்தது. மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அன்று அனைவரின் பாராட்டுக்குரியதாகவும் இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்டகாலமாக மந்தநிலையில் இருந்ததால் கிளிண்டனின் பயணம் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இருந்தது. மேலும் 1991 இல் சோவியத் யூனியன் பிரிவினைய தொடர்ந்து இந்தியா அமெரிக்கா உறவில் ஒரு இணக்கமான சூழல் உருவானது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த கார்கில் போரின் போது, கிளிண்டண் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவை ஆதரித்தார்.
இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையைத் ஆரம்பித்து வெளிநாட்டு முதலீட்டிற்கான கதவுகளைத் திறந்த சமயத்தில் கிளிண்டன் இந்தியா வந்திருந்ததால் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான ஒப்பந்தங்கள் இந்தியாவின் வணிகத்தை உயர்த்தியதில் மிகப்பெரும் பங்காற்றின.
ஜார்ஜ் புஷ்
இதற்குமுன்பு இந்தியா வந்த அமெரிக்க அதிபர்களிலேயே ஜார்ஜ் புஷ்ஷின் பயணம் இந்தியாவிற்கு மிகப்பெரும் திருப்புமுனை வாய்ந்த பயணமாக இருந்தது, ஏனெனில் இந்தியா உடனான அணுசக்தி ஒப்பந்தம் புஷ் அதிபராக இருந்த காலத்தில் தான் நிறைவேறியது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியா தனது சிவில் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை பிரித்து, சர்வதேச ஆய்வுக்காக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை திறந்தது. மேலும் அமெரிக்காவும் இந்தியாவுடனான அணுசக்தி வர்த்தகம் மீதான தடையை முடிவுக்கு கொண்டுவந்தது. பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை உயர்த்தியது என ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய பயணத்தில் இந்தியாவிற்கான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையெழுத்தானதால் புஷ்ஷின் வருகை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
பாரக் ஒபாமா
இரண்டு முறை இந்தியாவிற்கு வந்த ஒரே அதிபர் பாரக் ஒபாமா தான்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசின் போது இந்தியாவிற்கு வந்த ஒபாமா சுமார் பத்து பில்லியன் மதிப்பிலான வணிக ரீதியிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதன்படி பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்க, இந்தியாவின் உயர் தொழில்நுட்ப பொருட்கள் மீதான ஏற்றுமதி விதிமுறைகளை தளர்த்த அந்த ஒப்பந்தங்கள் வழிவகுத்தது. பின்னர் இன்றைய பிரதமர் மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றதும் குடியரசு தினவிழாவில் சி்றப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமரின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபரும் ஒபாமா தான்.
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகளை மேம்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து இணக்கமாக இருக்கும் என அன்று ஒபாமா தெரிவித்தார்.
இப்படி ஒவ்வொரு முறையும் அமெரிக்க அதிபர்கள் வருகையின் போதும் பல்வேறு ஒப்பந்தங்கள், திட்டங்கள் என உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலேயே அமெரிக்க அதிபர்களின் பயணங்கள் இருந்தன. அந்த வகையில் உலக அளவில் தீவிரவாதத்தை தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கி உள்ளது.