அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர, அமெரிக்க அதிபருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் குழு, இந்தியாவின் மிக உயரிய பாதுகாப்பு பிரிவான NSG எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை, சிறப்புப் பாதுகாப்புப் படை உள்ளிட்டவையும் அதிபர் டிரம்ப் வருகைக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளன. டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளில்லா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான இடைமறித்தல் தொழில்நுட்பமும் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுடும் தாக்குதல்களை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து, மொடேரா மைதானம் வரையில் என்எஸ்ஜி மேற்கொண்டுள்ளது. அதிபர் டிரம்ப் செல்லும் பாதையில் வெடிகுண்டு சோதனைகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் செல்லும் பாதையில் 100 வாகனங்கள் அடங்கிய அணிவகுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 25 ஐபிஎஸ் அதிகாரிகள், அதிரடிப் படையினர், மாநில ரிசர்வ் படையினர், சேட்டக் கமாண்டோ படையினர், பயங்கரவாத தடுப்புப் படையினர் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதேபோல், ஆக்ரா மற்றும் டெல்லியிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.