கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகருக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் இந்திய விமானப்படையின் சி-17 போயிங் விமானம் புறப்படத் தயாராக உள்ளது.
இந்தியா வர பதிவு செய்துள்ள100 இந்தியர்களையும் இந்த விமானம் வூகான் நகரில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளது. விமானத்திற்கு சீன அரசு அனுமதியளிக்காமல் வைத்ததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தாமதப்படுத்துவதாக வந்த செய்திக்கு சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இதையடுத்து சீனாவின் வூகானுக்குப் பறக்க ராணுவ விமானம் தயாராகி வருகிறது.
டெல்லியை அடுத்த காசியாபாத்தில் உள்ள ஹில்டன் விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் நேற்றிரவு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டன. தாமதமானதற்காக கவலைப்படாமல் அமைதியுடன் காத்திருக்கும்படி இந்தியர்களுக்கு தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.