கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,462ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதல்முறையாக கொரானாவுக்கு 2 பேர் பலியாகியிருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவின் வூகான் பகுதியில் இருந்து கொரானா வைரஸ் உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது. சீனாவில் அந்த வைரசுக்கு மேலும் 97 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் 2 பேர் வைரஸுக்கு உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் லொம்பார்டியில் (Lombardy) 75 வயது மூதாட்டி ஒருவரும், வெனிடோவில்(Veneto) 78 வயது முதியவரும் பலியாகியுள்ளனர். இதேபோல் இத்தாலியில் 59 பேருக்கு வைரஸ் பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக, வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் 10 இத்தாலிய நகரங்கள் சீலிடப்பட்டுள்ளன. அங்குள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் நேற்று முன்தினமும், நேற்றும் கொரானா வைரஸுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து 14 மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள், கலாசார மையங்களை ஈரான் அரசு மூடியுள்ளது.
ஈரானின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 பேருக்கும், லெபனானில் ஒருவருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் ஈரானை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து ஈரானுடனான எல்லையை அதன் இன்னொரு அண்டை நாடான ஈராக் சீலிட்டுள்ளது. ஈரானுக்கு இயக்கப்படும் விமானங்களையும் தற்காலிகமாக ஈராக் ரத்து செய்துள்ளது. இதேபோல் குவைத், சவூதி அரேபியா நாடுகளும் ஈரானுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் புதிதாக இந்தியர்கள் 4 பேருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அக்கப்பலில் வைரஸ் பாதிப்புக்கு ஆளான இந்தியர்கள் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு முன்னர் பரிசோதனை செய்யப்பட்ட 23 பேர், மறு பரிசோதனை செய்யப்படாமலேயே கப்பலில் இருந்து வெளியேறியதாக ஜப்பான் சுகாதார துறை அமைச்சர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார். நிர்வாக குறைபாடு காரணமாக நடந்த இந்த தவறுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக கொரானா வைரஸுக்கு பலியானோரையும் சேர்த்து இதுவரை உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 462ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையும் 78 ஆயிரத்து 773ஆக அதிகரித்துள்ளது.