NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வராது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் என்.ஆர்.சி குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்ற அவர், இதனால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு பலன் மட்டுமே கிடைக்கும் என்றார்.
நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில், அந்த திட்டம் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.