உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்தமொழிக்கே உரிய தனித்தன்மையுடன் சிறந்து உள்ளன.மனித சமூகத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் தன்னுடைய தாய்மொழி அடையாளமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட தாய் மொழியை பாதுகாக்க யுனெஸ்கோ அமைப்பால் உருவாக்கப்பட்டது தான் சர்வதேச தாய் மொழி தினம்.
அன்றைய பாகிஸ்தானில் 1952ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் (இன்று வங்கதேசத்தில் உள்ளது) வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கலவரத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர் அவர்களின் நினைவாக யுனெஸ்கோ பிப்ரவரி 21ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது.
மனித இனம் தோன்றியது முதல் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள, சைகைகள் மூலம் பேசிக்கொண்டிருந்த மனிதன் தன்னுடைய ஆற்றலுக்கு ஏற்ப தனக்கு பேச வந்த வார்த்தைகளை தொகுத்து மொழியாக மாற்றினான். பின்னர் இலக்கணமாக தொகுத்து இலக்கியம் பாடல்கள் என மொழிகள் பல்வேறு பரிமாணங்களை அடைந்தன.
மொழிகள் நாட்டுக்கு நாடு,மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் உலகில் மொத்தம் 6 ஆயிரம்மொழிகள் உள்ளன இதில் 1500 மொழிகள் 1000 பேருக்கும் குறைவானவர்கள் பேசுவதாகவும். 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுவதாகவும் மொழியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் 74 சதவீத மக்கள் இந்திய ஐரோப்பிய மொழிகளை பேசுவதாகவும்,23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிகளை பேசுவதாவும் கூறுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவில் சுமார் 7 கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர் எனவும் கூறுகின்றனர்.
உலகில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் உரிய மரியாதையும்,பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்திற்க்காகவே ஆண்டுதோறும் இந்த நாளில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. எனவே நம் தாய்மொழியை பற்றோடு பேணி காத்து,மற்றவர்கள் பேசும் மொழியையும் மதித்து ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு வாழ வேண்டும்.