அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24ம் தேதி அகமதாபாத் வருகிறார். அங்கிருந்து ஆக்ராவுக்கும் டெல்லிக்கும் அவர் பயணம் மேற்கொண்டு 25ம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடன் பின்னர் மேற்கொள்வதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிரம்ப்பின் வருகையை ஒட்டி 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து பெறுவது தொடர்பாக டிரம்ப்புடன் வருகை தரும் அமெரிக்காவின் வர்த்தகக் குழுவினரிடம் வெளியுறவு அமைச்சகம்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளும் டிரம்ப் -மோடி சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.