அமெரிக்க அதிபர் டிரம்ப் 24ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்-ஆக்ரா-டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 36 மணி நேரம் இருக்கும் டிரம்ப் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில் அவருடன் 3 கேபினட் அமைச்சர்கள் அடங்கிய குழுவினரும் வருகை தர உள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது மனைவி மெலானியா மற்றும் 3 அமைச்சர்கள் சூழ 24ம் தேதி அகமதாபாத் வருகிறார்.
தமது மருமகனான ஜாரேத் குஷ்னர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவுடன் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் நாளில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானம் வரையில் சுமார் 7 லட்சம் பேர் டிரம்ப் -மோடியை வரவேற்க உள்ளனர்.
டிரம்ப்புடன் அமெரிக்க வர்த்தகத்துறை பிரதிநிதியான ராபர்ட் லைட்ஹைசர் இந்தியா வர உள்ள குழுவில் இணைந்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டெல்லி வர இருந்த அவருடைய பயணம் ஒத்திப் போடப்பட்டது. அகமதாபாதில் இருந்து ஆக்ரா செல்லும் டிரம்ப் அங்கு தாஜ்மகாலை காண இருக்கிறார்.
டெல்லியில் பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடியுடன் டிரம்ப் நேருக்கு நேராய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். டிரம்ப்பின் வருகையை ஒட்டி டெல்லியில் 24 மற்றும் 25ம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காந்தி நினைவிடம், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 26 மணி நேரம் டிரம்ப் டெல்லியில் இருப்பார்.
டிரம்ப்புக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். முதல் சுற்று அவருடைய சொந்த பாதுகாவலர்கள், இரண்டாவது அவருடைய பாதுகாப்பு வீரர்கள், மூன்றாவது துணை ராணுவப்படையினர் நான்காவது டெல்லி போலீஸ் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.