காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு கொள்கை முடிவும் எடுக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு எதிராக ஏதேனும் நிறுவனம் வழக்கு தொடர்ந்தாலும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதன் மூலம் அதில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சட்டமன்றத்தில் இன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.