நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளில் இரண்டாம் கட்ட தூய்மை பாரதம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விவரித்தார். அதன்படி, அடுத்த நிதியாண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை ஊரகப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இரண்டாம் கட்ட தூய்மை பாரத திட்டத்திற்கு மத்திய அரசு 52 ஆயிரத்து 497 கோடி ரூபாய் நிதி வழங்கும்.
திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்கவும், திட, திரவ கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டின் எந்த வீடுகளிலும் கழிவறை இல்லாத நிலைமையை மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ள மத்திய அரசு, தற்போதுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கழிவறை அமைக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். இது தவிர பஞ்சாயத்துகள் வாயிலாக கிராமங்களில் சமூக கழிவறை வளாகங்களை கட்டுவதற்கான நிதி உதவியை, 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தூய்மை பாரதம் இரண்டாம் திட்டத்திற்கான செலவில் 60 சதவிகிதம் மத்திய அரசாலும் 40 சதவிகிதம் மாநில அரசாலும் மேற்கொள்ளப்படும யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவிகித செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். அடுத்த நிதியாண்டில் கிராமப்புற குடிநீர் வசதி மற்றும் சுகாதாரப்பணிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 ஆயிரத்து 375 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தூய்மை பாரத திட்ட கட்டுமான பணிகள் வாயிலாக கிராமப்புற பொருளாதாரத்தை வளர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை அமைச்சரவைக் கூட்டம் அங்கீகரித்துள்ளது. கடந்த 2014 ல் தூய்மை பாரத திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.