டெல்லியை சேர்ந்த முதியவர் தனது 93 வயதில் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பட்டம் பெற வேண்டும் எனும் தனது ஆசையை வயதின் காரணமாக தள்ளி போடாமல் தனது 93 வயதிலும் தளராமல் படித்து முதுகலை பட்டம் பெற்றுள்ளார் சிவசுப்பிரமணியன் எனும் முதியவர். டெல்லி இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார் அவர்.
டெல்லியை சேந்த சிவசுப்பிரமணியன் 1940 களில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார் பிறகு தான் பட்டம் பெற வேண்டும் என நினைத்துள்ளார் ஆனால் சூழ்நிலை காரணமாக தன்னுடைய குடும்பம் சென்னைக்கும் திருச்சிக்கும் குடிபெயர்ந்து கொண்டிருந்தனர், பின்னர் இறுதியாக டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.
டெல்லியில் தனது பட்டப்படிப்பை தொடரலாம் என் அவர் முடிவெடுத்த தருவாயில் அவருடைய பெற்றோர் வயதின் காரணமாக நோய்வாய்ப்பட்டனர் கூடுதலாக அவர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு சிவசுப்பிரமணியனுக்கு வந்தது இதனால் பட்டப்படிப்பை படிக்காமல் மத்திய அரசு அலுவலகத்தில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்தார். மேலும் அந்த அலுவலகத்திலேயே இயக்குனராக பதவி உயர்வு அடைந்து ஓய்வுபெற்றார்.
இருந்தாலும் தன்னுடைய கனவான பட்டபடிப்பை தொடர வேண்டும் எனும் ஏக்கம் அவரை விடவில்லை. பட்டம்பெற வாய்ப்பு ஏதாவது கிடைக்காத என தேடிக்கொண்டே இருந்த அந்த முதியவருக்கு ஒருநாள் தன்னுடைய மனைவியை பரிசோதிக்க வந்த மருத்துவர் திறந்தநிலை பல்கலைக்கழம் பற்றி கூறியுள்ளார். மேலும் அதற்கு வயதும் தடையில்லை என்று அவர் தெரிவித்தது சிவசுப்ரமணியனுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
உடனே இளங்கலை பொதுநிர்வாகத்தில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.மேலும் முதுகலை படிப்பிலும் தேர்ச்சி பெற்று தனது கனவை நிறைவேற்றினார் இந்த 93 வயது முதியவர். இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அதிக வயதுடைய மாணவர் சிவசுப்பிரமணியன் மட்டுமே. மேலும் தன்னுடைய அடுத்த கட்ட திட்டமாக Mphil படிக்க நினைத்தார் ஆனால் அந்த படிப்பில் சில இடங்கள் மட்டுமே உள்ளது எனவும் அவை தகுதியான மாணவர்களுக்கு விட்டுக்கொடுங்கள் என தன்னுடைய மகள் கேட்டுக்கொண்டதால், அந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்துள்ளார் சிவசுப்பிரமணியன்.
தன்னுடைய தள்ளாத வயதிலும் படிப்பின் மீதான ஆர்வத்தை நிறைவேற்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ள சிவசுப்பிரமணியன் இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.