வளர்ச்சித் திட்டப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்காக 350 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, காடுகளும், மரங்களும் அழிக்கப்படுவது இதே வேகத்தில் தொடர்ந்தால், வெகு விரைவில் நாம் அனைத்தையுமே இழந்துவிடுவோம் என்று தெரிவித்தது.
மரங்களை வெட்டி வீழ்த்தாமல் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மாற்று வழிகள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் செலவானாலும் மரங்களைப் பாதுகாப்பதற்காக இந்த செலவுகளை ஏற்பதில் தவறேதுமில்லை என்று குறிப்பிட்டனர்.
இயற்கையாக அமைந்த மற்றும் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நீராதாரங்களை அழிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த தலைமுறையினர் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த பூமியை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று சுட்டிக் காட்டினர்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் வளர்ச்சித் திட்டங்களும் மாற்று வழிகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் இதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்கும் என்று தெரிவித்தனர்.
வளர்ச்சித் திட்டத்துக்காக, மரங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்போது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு நடத்தப்படும் என்று தங்கள் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.