காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே சமரசத்திற்கு உதவத் தயார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் நான்கு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குட்டரஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மிகவும் கவலையளிப்பதாகவும், இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச முயற்சிக்குத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நா. பொதுச்செயலாளரின் இந்தக் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பற்றி பேசும்போது பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்ட்ட பகுதிகள் குறித்தும் சேர்த்து பேச வேண்டும் எனறும் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டி வரும் தீவிரவாதத்தால் ஜம்மு காஷ்மீர் உள்பட இந்தியாவுக்கே அதன் அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா. பொதுச்செயலாளர் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல முறை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரச முயற்சியை குறித்து பேசிய போதும் இந்தியா அதனை ஏற்க மறுத்து விட்டது. அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகள் காஷ்மீர் குறித்து பேசும் போது இந்தியாவின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.