புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தனியார் ஏஜென்டுகள் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது, ஐ.ஆர்.சி.டி.சி யின் 'லோகோ' இல்லாத பயணச் சீட்டுக்கள் செல்லாது என்று கூறியுள்ள ஆர்.பி.எஃப் போலீசார், இதுகுறித்து பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
வெளியூர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் செல்ல வேண்டியிருப்பவர்கள், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். தனியார் ஏஜெண்டுகள் இதற்கென பணம் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்து கொடுக்கின்றனர்.
ரயில்வே நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற ஐ ஆர் சி டி சி (IRCTC) நிறுவனம் அவர்களுக்கு ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரியோடு முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்குகிறது.
ஆனால் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மட்டுமல்லாமல், தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி, முன்பதிவு தொடங்கிய 20 வினாடிகளில், புதிய தொழில் நுட்பத்தினால், நூற்றுக்கணக்கான ரயில் டிக்கெடுகளை பதிவிடுவதால், பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவது வாடிக்கையாகி வந்தது.
இதுபோன்ற புகாரின் அடிப்படையில், ரயில்வே நிர்வாகத்தால் அங்கிகாரம் பெற்ற ஐ ஆர் சி டி சி சர்வரை ஆய்வு செய்த போது, பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான ரயில் டிக்கெட்டுகளை தொடர்ந்து முன்பதிவு செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை உள்ளிட்ட 6 மண்டலத்தில் உள்ள 39 தனியார் ஏஜெண்டுகள் நடத்தி வந்த டிராவல்ஸ் அலுவலகங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஒரு லட்சத்துக்கும் மேலான முன்பதிவு ஆன்லைன் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த ஆர் பி எஃப் போலீசார் 39 பேரை ரயில்வே சட்டப்படி கைது செய்தனர்.
5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளையும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கருப்பு பட்டியலில் சேர்த்தது மட்டுமல்லாமல், IRCTC வழங்கிய அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளனர்.
இதனிடையே தனிப்பட்ட இ மெயில் ஐ டி மூலம் ஏஜெண்டுகளிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள், ஆர்.பி.எஃப் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதால், கடைசி நேரத்தில் பயண டிக்கெட் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க, ஆன்லைன் டிக்கெட்டுகளில் ஐ ஆர் சி டி சி யின் அங்கிகாரம் இருக்கிறதா என்பதை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg