புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினர்.
வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை பாதுகாப்பு படையினரின் வாகனத்தில் மோதச் செய்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, தேசத்திற்கு சேவை புரியவும், பாதுகாக்கவும் தங்களை அர்ப்பணித்த வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறக்காது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதே போல் வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தீவிரவாதத்திற்கு எதிராக மொத்த தேசமும் ஒன்றுமையுடன் நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.