இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனாக் இங்கிலாந்தின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். அப்போது, நிதியமைச்சராக இருந்த சஜித் ஜாவித்திற்கு பதிலாக ரிஷி சுனக்கை அவர் நியமித்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான ரிஷி சுனக், 2015-ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர், நாராயணமூர்த்தியின் மகள் அக்சதாவின் கணவராவார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல், அலோக் சர்மா ஆகியோரைத் தொடர்ந்து ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் இணைந்துள்ளார்.
முன்னதாக, நிதியமைச்சராக இருந்த சஜித் ஜாவித்திடம், அரசியல் ஆலோசகர்களை மாற்றவேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை விதித்ததாகவும், அதனை ஏற்க மறுத்து, சஜித் ஜாவித் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.