ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நாளை ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வரும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது.
19 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அபூர்வ நிகழ்வு வரும் என்று கூறப்படுகிறது. இதன்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார்.
ஆனால் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி பாலிமர் தொலைக்காட்சியிலும், ஜோதி தொலைக்காட்சியிலும் அதிகாலை 3.30 மணி முதல் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகிறது. நம்பெருமாள் பரமபத வாசலை கடக்கும் நிகழ்வை நேயர்கள் நேரலையில் காணலாம்.