சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாக, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடத்தப்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று, திக்விஜயம் மற்றும் இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மனும் சுவாமி சுந்தரேஸ்வரரும் ஆடி வீதியில் வலம் வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோவிலின் ஆடி வீதிகளில் பவனி வந்தனர். வீதியுலா நிறைவு பெற்றதும், கோவிலின் முத்துராமையர் மண்டபத்தில் வீற்றிருந்து, கன்னி ஊஞ்சல் ஆடி அருள்பாலித்தனர்.
இந்திராதி தேவர்கள் அங்கு கூடி, திருமணத்தை நிச்சயிப்பதாக ஐதீகம்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அம்மை மீனாட்சியும் அப்பன் சொக்கநாதரும் புதுப்பட்டு உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் சுவாமிக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. குளிர்ச்சியாக இருக்கும் வகையில், 20 கிலோ வெட்டிவேர் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையின் கீழ், ஒன்றரை டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில், காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்வை, இணையதளம் மூலம் காண கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
வழக்கமாக மீனாட்சி திருக்கல்யாண நாளில், சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த முறை கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கவில்லை என்பதால் நேரலையை பார்த்து தாலியை மாற்றிக் கொண்டனர்.