மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலால் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் கோவிலுக்கு உள்ளே ஆடி வீதியில் வாகனங்களில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். ஏப்ரல் 22ஆம் நாள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 23ஆம் நாள் திக் விஜயம், 24ஆம் நாள் திருக்கல்யாணம் ஆகியன நடைபெற உள்ளன.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமாகப் பதினோராம் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டமும் இந்த ஆண்டு நடைபெறாது. கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வழக்கம்போல் வழிபாட்டுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.