அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது. அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி- திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை- ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்... இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் நன்னாளில் அவதரித்தவரே ஆஞ்சநேயர்.
ராமநாமத்தையே தாரக மந்திரமாகவும் உயிர்மூச்சாகவும் கொண்ட பக்தன் அனுமன். அவரது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அனுமன் கோவில்களில் நெய்தீபம் ஏற்றி மலர்களையும் வெற்றிலை துளசி போன்றவற்றையும் சூட்டி இளநீர், பால் அபிசேகம் செய்வது பக்தர்களின் வழக்கம்.
நாமக்கல்லில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலையில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.