கொரோனா பாதிக்கப்பட்டோரும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டால், முதலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி அணைப்பது தீக்காயம் ஆழமாக ஏற்படுவதை தடுப்பதோடு, வலியையும், எரிச்சலையும் குறைக்கும். தீக்காயம் ஏற்படும் போது தண்ணீர் ஊற்றி அணைப்பதே சிறந்த முதலுதவியாக இருக்கும் என்பது மருத்துவர்களின் மிக முக்கியமான அறிவுறுத்தலாக உள்ளது.
தண்ணீர் இல்லாத இடமாக இருந்தால் மட்டுமே தீக்காயம் பட்டவர்களை துணியால் சுற்றி தரையில் உருட்டி அணைக்கலாம். கம்பளி வைத்து சுற்றுவதால், ஆக்சிஜன் தடைபடுவதால் தீ அணையும். கம்பளியை பயன்படுத்தி அணைப்பதற்குள் தீக்காயம் இன்னும் ஆழமாக வாய்ப்பிருக்கிறது. தீ பற்றிய இடங்களில் காஃபி பவுடர், மஞ்சள், ஐஸ்கட்டி, பேனா மை ஆகியவற்றை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. உடலில் தீப்பிடித்தவர்கள் வேகமாக ஓடக் கூடாது, காற்றின் வேகத்தால் தீ இன்னும் கொளுந்துவிட்டு எரிய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களோ, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களோ தீபாவளி நேரத்தில் புகை மண்டலத்தில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டோரும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது எனவும், கொரோனா தொற்று பாதித்தோருக்கு ஏற்கனவே நுரையீரல் பலவீனமாக இருக்கும் என்பதால், பட்டாசு புகை சூழ்ந்த பகுதியில் இருப்பதோ, அந்த காற்றை சுவாசிப்பதோ மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.