கொரோனோ தொற்று நோய்க்கான மருந்து விரைவில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அப்படி தடுப்பு மருந்து வந்துவிட்டால், இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் நோய் தடுப்பு மருந்தை அரசு எப்படி வழங்கக்கூடும்?, யார் யாருக்கு முதலில் போடப்படும்? யார் யாருக்கு இலவசமாக வழங்கப்படும் என்று பல விவரங்களை, இந்தியாவின் முன்னணி பொது ஆரோக்கிய நிபுணர் பேராசிரியர் கே.ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
முதலில் பல மருத்துவ பரிசோதனைகளை வெற்றிக்கரமாக கடந்து, பின்பு வழக்கமான சம்பிராதய அனுமதிகளைப்பெற்று, பின்னர்தான் கொரோனோ தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர முடியும். அப்படி பயன்பாட்டுக்கு வருமானால், அனைத்து மக்களுக்கும் உடனடியாக விநியோகம் செய்வது என்பது கடினமான ஒன்று. அதனால், அந்த தடுப்பு மருந்தை பெற வேண்டிய முன்னுரிமை கொண்டவர்கள் யார் யார் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
எந்த வயதினருமே பாதிக்கப்பட வாய்ப்புள்ள கடுமையான தொற்று நோய் கொரோனோ. இவர்கள் சிறியவர்கள், இவர்கள் இளம் வயதினர், இவர்கள் முதியவர்கள் என்ற வயது வித்தியாசம் அதற்கு இல்லை. ஆனால், எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், அதிக இரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு போன்ற வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும், கொரோனா தொற்று வந்தால் மீண்டு வருவது மிகக்கடினம்.
அதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், வேறு பல நோய்களும் இருந்து கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.அதற்குப் பின்னர், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்வோர் ஆகியோருக்கு முன்னுரிமை தேவை.
அடுத்து, இந்த தடுப்பு மருந்து எப்படி வேலை செய்யும், எவ்வளவு நாட்கள் பாதுகாப்பானது , எத்தனை தடவைகள் செலுத்தப்பட வேண்டும் என்ற விஷயங்களில் தெளிவில்லாததால் அந்த விவரங்களைப் பொறுத்தும் மருந்து விநியோகம் தீர்மானிக்கப்படும்.
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட மக்களிடமிருந்து ஆரம்பித்து, பின்பு 50 வயது, 40 வயது என்று பத்து பத்து வயதாக குறைத்து தடூப்பூசிப் போட முன்னுரிமை கொடுக்கப்படலாம். அதனால் வலிமையும் அதிக எதிர்ப்பு சக்தியும் நிறைந்த இளைஞர்கள் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை உண்டாகலாம்.
ஒருவேளை, மிக அதிக அளவில் தடுப்பு மருந்து தடையில்லாமல் கிடைக்குமானால் எல்லாத்தரப்பு மக்களும் விரைவில் பயனடைவார்கள் என்று பேராசிரியர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.