கொடைக்கானலில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக போலீசார் செய்த காரியம் பாரட்டுக்குரியதாக இருந்தது.
பிரபல சுற்றுலாதலமான கொடைக்கானலில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொடைக்கானல் காவல் துறையினர்
செய்த காரியம் பாரட்டுக்களை பெற்று வருகிறது.
அதன்படி, மூஞ்சிக்கல் பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருவது போன்றும், அவரது உடலுக்கு அருகில் உறவினர்கள் கூட செல்லமுடியாதவாறு கதறி அழுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை, பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
அப்போது, கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் , பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளியை பின் பற்ற வேண்டும்,கூட்டமாக வெளியே செல்ல வேண்டாம்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கூட பார்ப்பதற்கு முடியாத சூழ்நிலை நிலவுவதாக , பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
இறுதியில் , பொதுமக்களின் நலன் கருதி, இது வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியே, யாரும் அச்சம் அடைய வேண்டாம், என்று எடுத்துரைத்தார்.
காவல்துறையினர் நடத்திய நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.