முறையாக குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தாத காங்கயம் நகராட்சிக்கு, சுமார் 5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு, பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வீராணம் பாளையம் என்ற கிராமத்தில் தேங்காய் சிரட்டை மூலம் கரி தயாரிக்கும் நிறுவனங்களால் நிலத்தடி நீர் மாசடைந்து, நிலம் பாழ்பட்டு விட்டதாக உள்ளூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், கடந்த 2014 - ல் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிபுணர்குழு, வீராணம்பாளையம் கிராமத்தில் நீரும் நிலமும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என உறுதி செய்தது.
குறிப்பாக, பினோலிக் கலவைகள் தண்ணீரில் குடிக்க தகுதியற்ற நிலையில் அதிக அளவில் கலந்திருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள குழு, காங்கேயம்நகராட்சி மற்றும் கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. அடுத்த மாதம் கூடும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி, அபராதம் குறித்து, அதிகாரப்பூர்வ முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.