அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால் 5ஜி கருவிகளுக்கான தொழில்நுட்ப பாகங்களை பெறுவதில் சீன நிறுவனமான ஹுவாவேய்க்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், கொண்டுவரப்பட்ட தடையால் 5ஜி மொபைல் உள்ளிட்ட தகவல் உபகரணங்களுக்கான செமிகண்டக்டர்களை அந்த நிறுவனத்தால் பெறமுடியாது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் திட்டமிட்டபடி 5ஜி உபகரணங்கள் அளிக்க முடியாமல் பெரும் வர்த்தக இழப்புக்கு தள்ளப்படும் நிலைக்கு ஹூவாவேய் ஆளாகி உள்ளது.
அமெரிக்க-சீன உறவுகள் சரியாகவில்லை என்றால், ஹூவாவேயின் வர்த்தகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 5ஜி ஏலத்தில் ஹூவாவேய் கலந்து கொள்ளலாம் என கடந்த ஆண்டு அனுமதி அளித்த இந்தியா இப்போது அதற்கு நேர்மாறன முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்துமீறலின் விளைவாக சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தங்களுக்கும் சீன அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஹூவாவேய் கூறினாலும், அதை பல அரசுகள் நம்ப தயாராக இல்லை என்பதும், கொரோனா பரவலுக்கு காரணம் என சீனா மீது குற்றச்சாட்டு கூறப்படுவதாலும், ஹூவாவே நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.