உலகிலேயே அதிக சந்தை மூலனதம் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாக அமெரிக்காவின் டெஸ்லா உருவாகியுள்ளது. மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக லாபம் ஈட்டி வருகிறது.
இதையடுத்துப் புதனன்று அந்த நிறுவனத்தின் பங்குவிலை 5 விழுக்காடு உயர்ந்தது. ஒரு பங்கின் விலை ஆயிரத்து 133 டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்ததால், சந்தை மூலதனம் 20 ஆயிரத்து 947 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது டொயோட்டாவின் சந்தை மூலதனத்தைவிட 600 கோடி டாலர் அதிகமாகும். இந்த உயர்வால் உலகின் மிக மதிப்புவாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மோட்டார் கம்பெனி ஆகிய இரண்டின் மதிப்பையும் சேர்த்து வரும் ஒட்டுமொத்த மதிப்பைவிட டெஸ்லாவின் மதிப்பு மூன்று மடங்குக்கு மேல் அதிகமாகும்.
2020ஆம் ஆண்டு தொடங்கிய பின் டெஸ்லாவின் பங்குவிலை 163 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது. மின்சாரக் கார்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்கிற நம்பிக்கையில் டெஸ்லாவின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதே இதற்குக் காரணமாகும்.