கொரோனா சூழலிலும் ரயில் சக்கரத் தொழிற்சாலையில் கடந்த ஆண்டைவிட அதிக அளவு சக்கரங்களையும் அச்சுக்களையும் தயாரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரின் ஏலகங்காவில் ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில் சக்கரத் தொழிற்சாலை உள்ளது. ரயில்வே துறையின் இன்றியமையாத் தேவையான இரும்புச் சக்கரங்களையும் அவற்றை இணைக்கும் அச்சுக்களையும் இந்தத் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 15 ஆயிரத்து 582 இரும்புச் சக்கரங்களும், ஆறாயிரத்து 480 அச்சுக்களையும் தயாரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 15 ஆயிரத்து 295 சக்கரங்களும், ஐயாயிரத்து 20 அச்சுக்களும் தயாரிக்கப்பட்டதாகவும், அதைவிட நடப்பாண்டில் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.