சென்னை கோயம்பேட்டில் முன்னாள் காதலியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் காதலனின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்
சென்னையைச் சேர்ந்த தனியார் ஐ.டி. பெண் ஊழியருடன் ராங் காலில் அறிமுகமாகி பழகிய அம்பத்தூரை சேர்ந்த பரத் என்னும் இளைஞர்தான், காதலியுடன் லல் பிரேக் அப் ஆனதால் காரை ஏற்றி கொல்ல முயன்ற புகாருக்குள்ளானவர்
அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய பரத், டிரான்ஸ்போர்ட் தொழில் தொடங்கப்போவதாக கூறியும், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது எனவும் சிறிது சிறிதாக 25 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். நகைகளை அடமானம் வைத்தும் லோன் வாங்கியும் அந்தப்பெண் பணம் கொடுத்த நிலையில் வருங்கால கணவன் தானே என்று கடனுக்கான இ.எம்.ஐ. தொகையையும் அவரே கட்டி வந்தார். இந்தநிலையில்தான், பரத் இன்னொரு பெண்ணிடம் சுற்றுவது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
கணினி தொழில் நுட்பத்தில் கைதேர்ந்த அந்த பெண் பொறியாளர், பரத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தோண்டி துருவினார். அவன் பல சிறுமிகள், இளம்பெண்கள், வசதியான வீட்டு பெண்கள் என குறி வைத்து இன்ஸ்டாகிராமில் ஆசையை தூண்டும் வகையில் சாட்டிங் செய்து, அவர்களை காதல் வலை விரித்து ஏமாற்றி வருவதை கண்டறிந்ததால் காதலன் பரத் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதனால், பரத்தை விட்டு விலகி, தான் கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி கேட்டுள்ளார் இளம்பெண். பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த பரத் தனது தந்தை பிரகதீஸ்வரனுடன் சேர்ந்துகொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பரத் செய்த ஆபாச சாட்டிங்குகள் என ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களுடன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் பரத் மீது அந்தப்பெண் புகார் கொடுத்தும், பூந்தமல்லி போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், ஆவடி காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்ததன் பேரில், பரத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பரத்தை போலீசார் கைது செய்யாத நிலையில் , முன்னாள் காதலியை கார் ஏற்றிக் கொல்லும் படுபாதக செயலில் ஈடுபட்டதாக கூரப்படுகின்றது.
புகார் கொடுத்த பெண், தனது சகோதருடன் இருசக்கரவாகனத்தில் செல்வதை கண்டு , பரத்தும் அவரது சகோதரனும் காரில் பின் தொடர்ந்து கண்காணித்ததாக கூறப்படுகின்றது. தங்களை பரத் காரில் பின் தொடர்வதை அறிந்த அந்த பெண், தனது தம்பியுடன் சேர்ந்து காரை மடக்க முயன்ற போது அவர் மீது கார் ஏற்றி கொல்ல முயன்றதாக புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார் அந்த இளம்பெண்.
கோயம்பேடு ரோகிணி திரையரங்கு அருகே அவனது காரை ரிவர்ஸ் எடுத்து, தங்களை கொலை செய்ய முயன்றதாக இரண்டு சி.சி.டி.வி வீடியோ ஆதாரத்தையும் காவல்நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ளார்.