சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் 23ந்தேதி இரவு இருள் சூழ்ந்த பகுதியில் சீனியர் மாணவர் ஒருவர், விடுதியில் தங்கிப் படிக்கின்ற ஜூனியர் மாணவியுடன் தனிமையில் எல்லை மீறி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை புதர் மறைவில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபர், இந்த வீடியோவை காட்டி மாணவரை விரட்டிவிட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். போலீசில் புகார் அளித்தால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளான்.
முதலில் புகார் அளிக்க தயங்கிய அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் விவரித்துள்ளார். நாங்கள் துணையிருக்கிறோம் என்று பெற்றோர் கொடுத்த தைரியத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 24ந்தேதி மாலையில் புகார் அளித்தார். தன்னை வன்கொடுமை செய்த கொடூரனிடம், தனக்கு அந்த 3 நாட்கள், விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கதறியதாகவும், அதனை கேளாமல் அவன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறி அவர் கதறி அழுதார்
இதையடுத்து காவல் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டன. சம்பவத்தன்று அந்தப் பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களை வைத்து பல்கலைக்கழகத்துக்கு அருகே தள்ளுவண்டியில் பீப் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவனை அழைத்து போலீசார் விசாரித்தனர். தான் இயற்கை உபாதையை கழிக்க சென்றதாகவும், பல்கலைக் கழகத்தின் பின் பகுதியில் சுவர் இடிந்துள்ள பகுதி வழியாக எளிதாக எந்த தடையும் இன்றி பல்கலைக்கழகத்திற்குள் சென்று வந்ததாகவும் ஞானசேகரன் தெரிவித்தது போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சம்பவத்தின் போது அவன் என்ன உடை அணிந்திருந்தான் என்று மாணவியிடம் விசாரித்த போது, அவன் நீல வர்ணத்தில் டி சர்ட் அணிந்திருந்ததாக கூறியதை தொடர்ந்து. ஞானசேகரனின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர், வீட்டில் இருந்த அவனது தம்பியிடம் விசாரித்த போது, தனது அண்ணன் ஞானசேகரன் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பழக்கமுடையவன் என்றும் கடந்த 2012 ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீல வர்ண டிசர்ட்டையும் எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஞானசேகரனையும், அவரது நீல வர்ண டி- சர்ட்டையும் , பாதிக்கப்பட்ட மாணவிக்கு வாட்ஸ் அப் வீடியோ காலில் காண்பித்தனர். இதனை பார்த்த மாணவி, ஞானசேகரனை அடையாளம் காட்டி உறுதிபடுத்தியதாக கூறப்படுகின்றது. அதுவரை தனக்கும், மாணவிக்கும் சம்பந்தமில்லை என்று நாடகமாடிய ஞானசேகரன் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டான்
ஞானசேகருக்கு இரண்டு மனைவிகள் என்றும் அதில் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதும், அதனால் அடிக்கடி மனைவியை அழைத்து வர அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் அதனால் காவலாளிகளுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஞானசேகரன் உள்ளே செல்வது எளிதாக இருந்துள்ளது.
அப்பொழுதே மாணவ, மாணவிகள் தனியாக பேசுவதை நோட்டமிட்டு இது போன்று நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது
இதை அடுத்து ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் மனம் விட்டு பேச தனியாக ஒதுங்கும் பல்கலைகழக காதல் ஜோடிகளை குறிவைத்து புதரில் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதை ஞானசேகரன் வாடிக்கையாக செய்து வந்ததாகவும், தனது திருமணத்திற்கு முன்பாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு 3 ஆண்டுகளில் 9 வழக்குகளில் சிக்கியதாக கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்த ஞானசேகரனுக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறிய போலீசார் , ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர்
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன், மாணவி பல்கலைக்கழகத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்த 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்திருக்கும் பெருமை, தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினையே சாரும் என தெரிவித்தார்
இந்த சம்பவத்தின் எதிரொலியாக , அண்ணா பல்கலைகழகத்திற்குள் தனியார் பாதுகாவலர்களுடன் இனி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரனின் செல்போனில் அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இருந்த நிலையில் அவர் திமுகவில் மாணவர் அணியில் இருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளான்