இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இளைஞர் போலீசாரை கண்டதும் நிற்காமல் தப்பிக்க நினைத்தபோது, அவரை மடக்கிப்பிடித்த போக்குவரத்து காவலர் இருவர் கண்மூடித்தனமாக கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் புகாருக்குள்ளான போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இருவர் போலீசிடம் சிக்காமல் வாகனங்களுக்குள் மறைந்து செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. அவர்களை மறித்து வாகனத்தை நிறுத்த சொன்ன போக்குவரத்து காவலர் சார்லஸ் பைக் ஓட்டிய இளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்
ஒரு முறைக்கு இரு முறை அந்த இளைஞரை காவலர் அடித்ததை அருகில் சென்ற காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றால் உரிய அபராதம் விதிக்கலாம், உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யலாம், அதை விடுத்து வாகன ஓட்டியை அடிக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்று போலீசார் மீது விமர்சனம் எழுந்தது.
இருவரும் சிறுவர்களாக இருந்தால் பெற்றோரை வரவழைத்து நடவடிக்கை எடுக்கலாம் மாறாக பொதுவெளியில் இவ்வாறு தாக்குவது சரியானதா? என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காவலர் சார்லஸை ஆயுதப்படைக்கு மாற்றிய மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் குமார் மீனா, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இருசக்கரவாகன ஓட்டிகள் சட்டத்துக்காக என்றில்லாமல் தங்களின் உயிர் காக்க தலைகவசம் அணிய வேண்டும் என்பதே அனைவரின் அறிவுறுத்தலாக உள்ளது.