கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை கண்டு பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளியை விரைவாக கண்டுபிடிக்க வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
போலீசார் விசாரணை என்ற பெயரில் தங்களை அழைத்து குற்றத்தை ஒப்புக் கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறி அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் மறியலில் ஈடுபட்டனர்
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தியதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த களேபாரத்துக்கு நடுவில் கொலை செய்யப்பட்ட மாணவனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனரான கருப்பசாமி என்ற இளைஞரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி, சிறுவனிடம் பேசி நைசாக தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுவன் என்றும் பாராமல் அவனிடம் தவறான செயலில் மிருகத்தனமாக ஈடுபட்டதாகவும், அதில் மூச்சுத்திணறி சிறுவன் பரிதாபமாக பலியானதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவத்தை திசை திருப்பும் வகையில் சிறுவனின் கழுத்திலும், கையிலும் கிடந்த நகையை கழட்டி எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஏறி சிறுவனின் சடலத்தை வீசியுள்ளார். பின்னர் சிறுவனை காணவில்லை என்று பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் தேடும் போது இவரும் சேர்ந்து தேடியதாகவும்,
பின்னர் சடலம் கண்டெடுக்கப்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவுவது போல கருப்பசாமி நடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட சிறுவனிடம் , ஓரினச்சேர்க்கை வெறி கொண்ட யாரோ தவறாக நடந்து கொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாலும், சிறுவன் அந்த குடியிருப்பை தாண்டி எங்கும் செல்லவில்லை என்பதை உறுதி செய்ததாலும் குடியிருப்பில் இருக்கும் ஒவ்வொருவர் குறித்தும் விரிவான விசாரணையை முன்னெடுத்ததாக கூறிய போலீசார், இதில் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்டவர் என்பதை அவரது சக நண்பர்களின் மூலம் தெரிந்து கொண்டதாகக் கூறினர்
ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாரால் துன்புறுத்தப்படுவதாக கூறி சிலர் சிறுவனின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து மறியல் செய்யத் தூண்டியதாக கூறப்படுகின்றது.
இருந்தாலும் போலீசார் ஆட்டோ ஓட்டுனரை விடுவிக்கவில்லை, கொல்லப்பட்ட சிறுவனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வேறு நபரின் முக்கிய தடயத்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி இருந்த நிலையில் அது ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி உடையது என்பது அறிவியல் பூர்வமாக உறுதியானதாகவும்,
மருத்துவ ஆய்வின் அடிப்படையில் கருப்பசாமியை சிறுவன் கொலை வழக்கில் கைது செய்திருப்பதாகவும் போலீசார் அறிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜானின் தனிப்படையினர் மேற்கொண்ட மருத்துவ அறிவியல் பூர்வமான துப்பு துலக்கும் திறமையால் இந்த வழக்கில் கொலையாளியை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடதக்கது .