இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களில் வென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தேசிய கட்சி ஒன்றுக்கு ஏகோபித்த ஆதரவை தமிழர்கள் வழங்கியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற அதிபர் அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, நாடாளுமன்ற தேர்தலிலும் பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, பெரும்பான்மையான இடங்களில் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 இடங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 இடங்களையும் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி, தேசிய பட்டியல் உள்பட 145 இடங்களை கைப்பற்றியிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி கட்சி இம்முறை 159 இடங்களை கைப்பற்றியுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கையில் தனி ஒரு கட்சி 62 சதவீத வாக்குகளை பெற்று சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல்முறை எனக்கூறப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழர் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தேசிய கட்சி ஒன்றுக்கு ஏகோபித்த ஆதரவை தமிழர்கள் வழங்கியுள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் தமிழர்கள் மாற்றத்தை விரும்புவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், மனோ கணேசன், செல்வராசா உள்ளிட்டோர் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சிங்களவர் நடத்தும் கட்சிக்கு தமிழர்கள் ஆதரவு கிடைக்காது என்ற கருத்தை முற்றிலும் இந்த தேர்தல் முடிவுகள் புரட்டிப்போட்டுள்ளது. இதுவரை ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமை காட்டியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதர சிக்கல்களுக்கு தீர்வு, தமிழர்களுக்கு சம உரிமை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பி ஒப்படைக்கப்படும் என்ற அதிபர் அநுராவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு தமிழர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி செய்யுமா? மக்கள் தனக்கு வழங்கியுள்ள பெரும்பான்மையை எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் அநுர என்பதை பொறுத்திருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.