நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருப்பதாக வீடியோ வெளியான நிலையில் அந்த மீன்கள் கரை ஒதுங்கியதன் பின்னணி குறித்து மீன்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் கூடன்குளம் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஆயிரக் கணக்கிலான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றமும் வீச துவங்கியுள்ளது. இதனை வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் கூடம் குளம் அனுமின் நிலையத்துக்கு அருகில் மீன்கள் மர்மமாக இறந்து ஒதுங்குவதாக தகவல் பரப்பினார்.
இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவைகள் விற்பனை ஆகாததால் கிளாத்தி மீன்களை மீண்டும் கடலில் கொட்டப்பட்டதாகவும், அந்த மீன்கள் தான் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 23 ந்தேதி டன் கணக்கில் கிளாத்தி மீன்கள் கடலில் இருந்து வந்ததால் அவற்றை கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக கோழிதீவனத்துக்கு மீனவர்கள் விற்பனை செய்தது குறிப்பிடதக்கது.
அதே நேரத்தில் கரை ஒதுங்கிய கிளாத்தி மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.