சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டுப்போட சென்ற மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண்மணி கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேலி செய்தவர்களை தட்டிக்கேட்டதால், அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் கோமதி இவர் தான்..!
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமாணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், இவரது தம்பி ஜெயசங்கர் தனது மகள் ஜெயபிரியாவுடன் தேர்தல் நாளன்று ஓட்டுபோட சென்றுள்ளார்.
அப்போது அவர்களிடம் திமுக பிரமுகரான கலைமணி , தனது ஆதரவாளர்களுடன் கேலி பேசி வம்பிழுத்ததாகவும், தன் மீது நிலுவையில் இருக்கும் கத்தியால் வெட்டிய வழக்கை வாபஸ் பெற சொல்லி இருவரையும் தாக்க தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தடுக்கச் சென்ற ஜெயகுமார், அவரது மகன் சதீஷ்குமார், மனைவி கோமதி ஆகியோரை கலைமணியின் 10 பேர் கும்பல் சரமாரியாக சவுக்கு கட்டையால் தாக்கியதாகவும் கோமதி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஜெயகுமார், ஜெயசங்கர், சதீஷ் ஆகியோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் கலைமணி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கலைமணி, அறிவுமணி, ரவி , மேக நாதன், தீபா ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.