மீன்பிடிக்க தூண்டில் போட்ட சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த நிலையில், பெரியவர்கள் எவரும் அருகில் இல்லாததால் சிறுவர்களே காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
இதுகுறித்து சிசிடிவி அலர்ட் தகவல் தெரிவித்தும், உயிரைக் காப்பாற்ற இயலாமல் போன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராஜ். இவரது மகன் கணேஷ்குட்டி. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கணேஷ்குட்டி, புதன்கிழமை பள்ளி முடிந்தவுடன் வீட்டில் புத்தகப் பையை வைத்துவிட்டு அருகே உள்ள கிணற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றான்.
மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, தூண்டிலில் சிக்கிய மீனை வெளியே இழுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கணேஷ் குட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்தான். உடன் இருந்த சிறுவர்கள் அவனை கை கொடுத்து தூக்க முயற்சி செய்தனர்
மற்றொரு சிறுமியும் ஓடி வந்து அவரை தூக்க முயற்சித்தார். அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து அபாயகுரல் எழுப்பினர்.
பெரியவர்கள் எவரும் உடனடியாக அங்குவராத நிலையில் அவர்களது கண் முன்னரே சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியான சோகம் அரங்கேறியது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தனர் விரைந்து வந்து , சிறுவன் கிணற்றில் மூழ்கிய தகவல் அறிந்து கிணற்றில் குதித்து அவனை சடலமாக மீட்டனர்.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிறுவன் தண்ணீருக்குள் தத்தளித்த நிலையில், மற்றொரு சிறுவன் தனது தலையில் அடித்து காப்பாற்றுமாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் சிசிடிவி காமிரா அதனை புகைப்படமாக எடுத்து சேமித்து வைத்துக் கொண்டு, அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு அலர்ட் மெசேஜ் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
சிறுவனின் போதாத காலம், அந்த செல்போனை பயன்படுத்தியவர் வீட்டில் படுத்து உறங்கியதால் தனக்கு வந்த அலர்ட் தகவலை அவர் உடனடியாக பார்க்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக விளக்கமளித்த போலீசார், சில சிசிடிவி கேமராக்கள் சந்தேகத்துக்கு இடமான மூவ்மெண்ட் இருந்தால் அலர்ட் நோட்டிபிகேசன் கொடுக்கும் என்றும் அப்படித்தான் இந்த சம்பவம் தொடர்பாக மெசேஜ் அனுப்பி இருக்கின்றது என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது கவனம் தேவை என்றும் திறந்தவெளிக் கிணறுகளை கம்பி போட்டு மூடி இருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.